சமையல் டிப்ஸ்
இந்த கட்டுரை PDF file வேண்டும் என்றால் கிலே உள்ள லிங்க் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளவும்
🥗அம்மா சமையல் 🥗
டிப்ஸ்... டிப்ஸ்...
கடலை மாவு, சீயக்காய்த்தூள் இரண்டையும் கலந்து... வெள்ளி, பித்தளைப் பாத்திரங்களைத் துலக்கினால், அவை பளபளக்கும்!
தேங்காயும் பருப்பும் இல்லாமல் ஒரு திடீர் கூட்டு’ செய்யலாமா..? ஒரு டம்ளர் பாலில் 3 ஸ்பூன் கடலை மாவு, 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய், ஒரு ஸ்பூன் பொடித்த சீரகம், அரை ஸ்பூன் மிளகாய்த்தூள், கால் ஸ்பூன் மஞ்சள்தூள், சிறிது பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள். இந்தக் கலவையை வேகவைத்த காய்கறிகளுடன் சேர்த்து கொதிக்கவிட்டு,... கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு தாளித்தால், சுவையான கூட்டு தயார்!
பகளாபாத் தயாரிக்க சாதம் வேகவைக்கும்போது, ஒரு ஆழாக்கு அரிசிக்கு ஒரு டேபிள்ஸ்பூன் ஜவ்வரிசி வீதம் கலந்தால் சாதம் குழைவாக இருக்கும்.
சரியாக லட்டு பிடிக்க வரவில்லையா..? சிறிதளவு கோவாவை பூந்தியில் சூட்டோடு கலந்து பிடித்தால், லட்டு அருமையாக வரும். பால் சுவையுடன் லட்டு மேலும் ருசியாக இருக்கும்.
குத்துவிளக்கை முதலில் பழைய செய்தித்தாளால் துடைத்து, பிறகு புளி, உப்பால் தேய்த்துக் கழுவினால், எண்ணெய்ப்பிசுக்கு நீங்கி பளிச்’ என்று ஆகிவிடும்.
பூரிக்கு கோதுமை மாவைப் பிசையும்போது, ஒரு டேபிள்ஸ்பூன் சோயா மாவு, அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால், ஹோட்டல் பூரி மாதிரி உப்பலாக வரும்.
ரவா தோசை செய்யும்போது 2 ஸ்பூன் கடலை மாவு சேர்த்துச் செய்தால், தோசை நன்கு சிவந்து மொறுமொறுவென இருக்கும்.
பொரித்த அப்பளங்கள் நமர்த்துப் போய்விட்டால், அவற்றைத் துண்டுகளாக்கி வெறும் வாணலியில் வறுத்து... சிறிதளவு தேங்காய், புளி, பச்சை மிளகாய், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து, தண்ணீர் தெளித்து அரைத்தால்... சுவையான அப்பளத் துவையல் தயார்!
சர்க்கரைவள்ளிக் கிழங்கை மண்போக கழுவி, தோல் சீவி துருவி, தேவையான சர்க்கரை, சிறிதளவு ஏலக்காய்த்தூள், வெனிலா எசன்ஸ் சேர்த்து சின்னச் சின்ன கப்புகளில் போட்டு இட்லி குக்கரில் வேகவைத்து எடுத்தால்... புது வகை ஸ்வீட் ரெடி.
புதினா இலைகளைக் காயவைத்து, உப்பு சேர்த்து பவுடராக்கி, அதைக் கொண்டு பல் துலக்கி வந்தால், பெரும்பாலான பல் உபாதைகள் விலகிவிடும்.
வீட்டில் உபயோகப்படுத்தும் கத்தி, அரிவாள்மணைகளில் துருப்பிடித்திருந்தால், அந்த இடத்தில் செங்கல் பொடியைத் தூவி தேய்க்கலாம். உருளைக்கிழங்கை இரண்டாக வெட்டி தேய்த்தாலும் துரு போய்விடும்.
ஊறுகாயை பாட்டிலில் போடும் முன்பு பாட்டிலின் உட்புறம் வெதுவெதுப்பான எண்ணெயைத் தடவிவிட்டால், பூஞ்சை ஏற்படாது.
இரவு சாப்பாட்டுக்குப் பிறகு, ஒரு ஆரஞ்சு பழத்தின் சாற்றுடன், ஒரு ஸ்பூன் தேன் கலந்து பருகினால், தூக்கம் நன்றாக வரும்.
உளுந்து வடைக்கு பருப்பு ஊறவைக்கும்போது, ஒரு பிடி துவரம்பருப்பையும் சேர்த்து ஊறவைத்தால்... வடை அதிகம் எண்ணெய் குடிக்காது; அதிக நேரம் ருசி மாறாமல் இருக்கும்.
பாயசம் நீர்த்துப் போய்விட்டால், கொஞ்சம் பொட்டுக்கடலை மாவை காய்ச்சிய பாலில் கரைத்துச் சேர்த்தால் போதும். பாயசம் பதமாவதுடன், சுவையும் கூடும்.
எண்ணெய்ப் பாத்திரங்களைத் தேய்க்கும்போது, முதலில் அவற்றை டிஷ்யூ பேப்பரால் அழுந்த துடைத்துவிட்டு, பிறகு தேய்த்தால்... எளிதாகத் துலக்கிவிடலாம். தண்ணீரும் குறைவாக செலவாகும்.
குக்கரில் உள்ள கேஸ்கட்டை உபயோகிக்கும் நேரம் போக, மற்ற நேரத்தில் நீர் நிரம்பிய தொட்டிகளில் கிடக்கும்படி செய்தால், நீண்ட நாட்களுக்கு உழைக்கும்.
அடுப்பிலிருந்து பாத்திரங்களை எடுத்தவுடன், ‘சிங்க்’ அடியில் வைத்து குழாயைத் திருப்பிவிட்டால், அவற்றின் ஆயுள் குறையும். சூடு ஆறியதும்தான் பாத்திரங்களைக் குழாயின் அடியில் வைக்க வேண்டும்.
வீட்டு அடுக்களையில் ஒரு டம்ளரில் மண் வைத்து, அதில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் ஊன்றி வைத்தால், துளிர் விட்டு வளர்ந்ததும், அதன் வாடைக்குப் பல்லி வரவே வராது.
அதிரசம் உதிர்ந்து போகிறதா..? மாவில் கொதிக்கும் பாலை ஊற்றி மூடுங்கள். சிறிது நேரத்துக்குப் பிறகு, நன்கு கிளறி, எண்ணெயைக் கையில் தொட்டு, மாவைத் தட்டுங்கள். மிருதுவான, மிக ருசியான, உடையாத அதிரசம் தயார்!
ஃப்ரிட்ஜை சோப்புநீர் போட்டு சுத்தப்படுத்தக் கூடாது. ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் கால் ஸ்பூன் சமையல் சோடாவை சேர்த்து, ஒரு மூடி எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். இதை சிறிய துணியால் தொட்டு ஃப்ரிட்ஜை துடைக்கவும். பிறகு நல்ல, துணியால் ஈரம் போக துடைத்தால்.. ஃப்ரிட்ஜ் `பளிச்’சென்று இருக்கும்.
கோடைகாலத்தில் எறும்புகள் வருவது அதிகம். உணவுப் பண்டங்களை சமையல் மேடையில் வைக்கும்போது, அவற்றைச் சுற்றி இடை வெளி இல்லாமல், மஞ்சள் பொடியைத் தூவி வைத்தால், எறும்புகளிலிருந்து காத்துக் கொள்ளலாம்.
வெயில் காலத்தில் மோர் விரைவில் புளித்துவிடும். அப்படிப் புளிக்காமல் இருக்க, வாழை இலையைச் சிறுசிறு துண்டுகளாக்கி மோரில் போட்டு வைத்து, மோரை உபயோகிக்கும்போது எடுத்துவிட வேண்டும்.
கேரட் அல்வா செய்யும்போது, சிறிதளவு பால் கோவாவையும் சேர்த்துக் கிளறி, கடைசியில் பாதாம
் எசென்ஸ் மிகவும் சிறிதளவு விட்டு இறக்கினால்... சுவையும், மணமும் அள்ளும்!
குலோப் ஜாமூன் பாகில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு இறக்கினால், பாகு உறையாமலும் நீண்ட நேரம் கெடாமலும் இருப்பதுடன், சுவையும் கூடுதலாகும்.
பூரிக்கு மாவு தயாரிக்கும்போது... ஒரு கப் மாவுக்கு, ஒரு ஸ்பூன் வீதம் ரவை கலந்தால், பூரி உப்பலாக வரும்.
பஜ்ஜி, வடை, வடகம், பட்சணம் செய்யும் எண்ணெயில் ஒரு சிறிய துண்டு இஞ்சியைத் தட்டிப் போடுங்கள். இது வயிற்றுக்கு நல்லது. பொரித்த பண்டங்களும் மணமாக இருக்கும
ருசியாகவும், மணக்க மணக்க சமைப்பதற்காகவும், சமைக்கும் முன்பும் பின்பும் தெரிந்துக்கொள்ள வேண்டிய அருமையான டிப்ஸ்...
* தேங்காய் துருவலுடன், ஊறவைத்து அரைத்த வேர்க்கடலையை சேர்த்து, தேங்காய் பர்பி செய்தால், வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.
* தோசை மாவுடன், சிறிதளவு சோளமாவு சேர்த்து தோசை வார்த்தால், தோசையின் சுவை அபாரமாக இருக்கும்.
* இட்லிப் பொடி தயாரிக்கும் போது, சிறிதளவு கருவேப்பிலையை வறுத்து சேர்த்து அரைத்தால், ருசியாக இருக்கும்.
* தயிர் வடை செய்யும் போது வடையை பொரித்ததும், அதை சில நிமிடங்கள் தண்ணீரில் நனைத்து பின் தயிரில் போட்டால் நன்றாக ஊறும்.
* ஜவ்வரிசி பாயசம் செய்யும் போது, இரண்டு டீ ஸ்பூன் வறுத்த கோதுமை மாவை பாலில் கரைத்து ஊற்றி செய்தால், பாயசம் கெட்டியாகவும் ருசியாகவும் இருக்கும்.
* இட்லிக்கான அரிசியை வெந்நீரில் ஊற வைத்து அரைத்தால், இட்லி பஞ்சு போல இருக்கும்.
* முள்ளங்கி சாம்பார் செய்யும் போது, சிறிதளவு எண்ணெயில் முள்ளங்கியை வதக்கிய பின் சாம்பார் செய்தால் ருசி கூடும்.
* கட்லெட் செய்யும் போது, அவை எண்ணெயில் போட்டதும் உதிர்ந்து போகாமல் இருக்க, கலவையில் சிறிது முட்டையை ஊற்றி பிசைந்து செய்யலாம். முட்டை விரும்பாதவர்கள் அதற்கு பதில் பிரட் துண்டுகளை தண்ணீரில் நனைத்து கட்லெட் கலவையுடன் சேர்த்து செய்யலாம்.
* கட்லெட் செய்ய ரொட்டி தூள் இல்லையென்றால், அரிசியை பொரித்து தூளாக்கி பயன்படுத்தலாம்.
* வெங்காய பஜ்ஜிக்கான வெங்காயத்தை, தோலை உரிக்காமல் வட்டமாக வெட்டி விட்டு பின் தோலை உரித்தால், வெங்காயம் தனித்தனியாக பிரியாமல் வட்டமாக இருக்கும்.
* உளுந்தம்பருப்பு வடைக்கு அரைக்கும் போது, சிறிதளவு பச்சரிசியையும் சேர்த்து அரைத்தால், வடை மொறுமொறுப்பாக இருக்கும்.
* உளுந்தம்பருப்பு வடைக்கு அரைக்கும் போது தண்ணீர் அதிகமாகி விட்டதா? அதில், சிறிது பச்சரிசி மாவைத் தூவினால் தண்ணீரை அரிசி மாவு உறிஞ்சிவிடும்.
* உருளைக்கிழங்கை சீவியதும் சிறிதளவு பயத்தம்பருப்பு மாவை தூவி, சிப்ஸ் செய்தால் மொறுமொறுவென்று இருக்கும்.
* பருப்பில் சிறிதளவு நெய் விட்டு வேக வைத்தால், விரைவாக வேகும். அதோடு சுவையும் மணமும் அதிகரிக்கும்.
* மோர் குழம்பு செய்து இறக்கும் போது சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி இறக்கினால் வாசனையாக இருக்கும்.
* கொண்டைக்கடலை, பட்டாணி, மொச்சை போன்றவற்றில் சமையலுக்குத் தேவையானதை, முதல் நாள் ஊறப் போட மறந்து விட்டால், அவற்றை எண்ணெய் விடாமல் நன்றாக வறுத்து பிறகு குக்கரில் வேக வைத்தால் நன்கு வெந்து விடும்.
* தோசை மாவு அரைக்கும் போது சிறிதளவு கடலைப் பருப்பை சேர்த்து அரைத்தால், தோசை பொன்னிறமாக வரும்.
* தோசை மாவில் வெந்தயப் பொடி சிறிதளவு சேர்த்து தோசை வார்த்தால் வாசனையாக இருக்கும்.
* மிளகாயை வறுத்து பொடி செய்யும் போது, சிறிது நல்லெண்ணெய் ஊற்றி வறுத்தால், அவை கமறாமல் இருப்பதோடு, பொடியும் மணமாக இருக்கும்.
* வற்றல் குழம்பு தாளிக்க நல்லெண்ணெய் பயன்படுத்தினால், வாசனை நன்றாக இருக்கும்.
Comments
Post a Comment